கிறிஸ்தவமும் சில்லாலையும்:
கிறிஸ்துவின் அன்புமிக்க நெஞ்சங்களே, 400 ஆண்டுகால திருச்சபையின் சரித்திரத்தைக் கைக்கொண்ட சில்லையூர் மக்கள், காலத்துக்குக் காலம் பல ஆலயங்களை, பல நிலைகளில் அமைத்து, ஈற்றில் 1957ம் ஆண்டு, நவீன வசதிகளைக் கொண்ட ஆலயம் ஒன்றை அமைத்தனர். கத்தோலிக்க மக்களின் அதிகரிப்பையும், தேவைகளையும் கருத்திற் கொண்டு அந்நாள் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய எமிலியானிஸ்பிள்ளையின் அநுசரணையுடன் அந்நாள் பங்குத்தந்தை, வணக்கத்துக்குரிய பிதா லூயிஸ் டெஸ்சி அவர்களால், தற்பொழுது இருக்கும் நவீன ஆலயம் அமைத்து முடிக்கப்பட்டது. அவ் ஆலயத்தை அவர் பூர்த்தி செய்தமைக்கு, அவரின் கடின உழைப்பும், பங்குமக்களின் ஒத்துழைப்பும் காரணமாய் இருந்தது. அவ் ஆலயத்தின் அமைப்புக்கேற்ற நவின கோபுரமொன்றை வணக்கத்துக்குரிய குலாஸ் அடிகளால் திட்டமிடப்பட்டு, வணக்கத்துக்குரிய இராஐ ரட்ணம் அடிகளால் கட்டி முடிக்கப்பட்டது. 1957ம் ஆண்டு கட்டப்பட்ட இவ் ஆலயம், அதன் பொன்விழாவை 2007ம் ஆண்டு கொண்டாடவுள்ளது. அவ்விழாவைக் கொண்டாட நாம் தயாராகுவோம். அக்காலங்களில் நடைபெறும் பெருநாள் நாட்களில், அவ்விழாவை அலங்கரிக்கும் சரோலைப்பாடல்கள் அல்லது பவனிப்பாடல்கள், எங்கள் விழாக்களை அதிகமாக அலங்கரித்தது, ஆனால் காலத்தால் அதன் வேகம் குறைந்து விட்டது. எனினும் அப்பாடல்களை மங்காது பாதுகாத்தவர், மாவோலை மரியாம்பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுபவர், அப்பாடல்களை திறமையாக நெறிப்படுத்தி வைத்தார். அவர் அமரரானபின், அவருடைய புத்திரரான அருட்திரு ம. பாவிலுப்பிள்ளை அ. ம. தி. அவர்கள் அப்பாடல்களை, காலத்துக்குக் காலம் அமைத்து, புத்தக வடிவில் வெளியிட்டு, நமது இளம் செல்வங்கள் அதை நன்கு பயன்படுத்த வழிசெய்துள்ளார். அவருக்கு, நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம். அத்துடன் இப்பாடல்களில் சிலவற்றை, இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன் சில்லையூர் பாடகர்களால் பாடப்பட்டு, சந்தியாப்பிள்ளை ஜெயரத்தினம் அவர்களால், ஒலிநாடாவில் பதிவுசெய்யப்பட்டது. 2000ம் ஆண்டு அவரின் விடாமுயற்சியினால், திரும்பவும் மீள் வெளியிடாக இசைத்தட்டில் வெளியீடப்பட்டுள்ளது. எமது ஆலயத்தின் 50ஆவது வருட பொன்விழாவை குறிக்கும், தேவாலயம் சம்பந்தமான சில தகவல்களையும், விசேடமாக எமது கிராமத்தின் முதல் பங்குத்தந்தையான முத்திப்பேறு பெற்ற, யோசவாஸ் முனிவரின் தகவல்களையும், நமது கிராமத்தின் துறவற சபையைச் சேர்ந்த அருட் சகோதர, சகோதரிகளின் நாமம் தாங்கிய பட்டியலையும் வெளியிடுவதற்கு ஆலோசனையையும், அநுமதியையும், ஆசீயையும், திருவாளர் ம. ஞானப்பிரகாசத்துக்கு வழங்கிய, தெகிவளை பங்குத் தந்தை A. B. அந்தேனிப்பிள்ளை அடிகளாருக்கு, எம் தாழ்மையான நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.


0 Comments:
Post a Comment
<< Home