சின்னறோமும் மரியன்னையின் விழாவும்:
ஆவணி 15ம் திகதி, மரியன்னை விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாட்சிமையை நினைவு கூறும் நன்னாள். அகில உலக கத்தோலிக்க சமுதாயம், அன்னையின் மாண்பை, மனத்திருப்தி மகிழ்வுடன், விழா எடுத்து நன்றி செலுத்துகிறது. மரியன்னையின் திரு விழாக்களிலே சிறப்பு வாய்ந்ததும், அர்த்தம் பொதிந்ததும், மரியன்னையின் விண்ணேற்பு விழாவே யாகும். இறைவனின் திட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கீழ்ப்படிந்தமையால், விண்ணக மகிமை அடைந்தாள், மரியன்னை. இறைவன் உலகுக்குத் தந்த தாயை திருநூலில் பல தடவை எடுத்தியம்பியுள்ளமை, மரியன்னையின் தாழ்மையையும், கீழ்ப்படிதலையும் தெளிவுபடுத்துகிறது.
மரியன்னையின் விண்ணக மகிமையை, தாய்ச்திருச்சபை மங்களகரமாக, புகழ்ந்தேற்றும் இந்த நன்னாளில், சில்லையூர் மக்களும் தம் பாதுகாவலியாம், கதிரைத்தாய்க்கு விழா எடுப்பது பெருமைக்குரியதாகும். ஏறக்குறைய 400 ஆண்டுகளாக கத்தோலிக்க பாரம்பரியத்தை, தன்னகத்தே கொண்ட சில்லையூர் தம்பாதுகாவிலியை, "கதிரைச் செல்வி", "ஆரோக்கியமாதா", "மருந்துமாதா", "தஸ்நோவின்மாதா" என இதய வாஞ்சையுடன், அழைத்து மகிழ்கின்றனர். கதிரையில் அமர்ந்து அன்புக்கரம் தந்து கருணை மழைபொழியும், கதிரைத்தாய்க்கு இடம் பெயர்ந்து வாழும் இடங்களில், கூட விழா எடுப்பது சில்லையூர் மக்கள் அன்னையின் பற்கொண்ட, பிள்ளைப் பாசத்தை எடுத்துக்காட்டுகிறது.
1544ஆம் ஆண்டில், போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம் வந்து, கத்தோலிக்க மதத்தைப் போதித்தனர். ஆங்காங்கே பல கற்தேவாலயம்களைக் கட்டினர். பண்டத்தரிப்பில், இன்று அமெரிக்கன் மிஷன் தேவாலயம் இருக்குமிடத்தில், ஆரோக்கியமாதாவுக்கென ஒரு தேவாலயம் அமைக்கப்பட்டிருந்தது. அத்தேவாலயத்தில் போர்த்துக்கேயரால், அதி அற்புதவிதமாய் பூஜிக்கப்பட்ட, ஆரோக்கிய மாதாவின் சுரூபம் இருந்தது. இச் சுரூபம் கதிரையில் இருந்து திவ்விய பாலனை மடியில் வைத்து, அரவனைக்கும் பாவனையாய் காணப்பட்டதால், கதிரை மாதாவென நாமம் பெற்றது. போர்த்துக்கேயரின் வசமிருந்த நாடு, ஒல்லாந்தரின் கைக்கு மாறியவுடன், இச்சுரூபத்தை ஒல்லாந்தர் அநாசாரஞ் செய்யாதபடி, சில்லாலைக் கிறிஸ்தவர்கள் ஒன்று சேர்ந்து, எவரும் காணாமல், இரவில் எடுத்து வந்து சில்லாலையில் மண்ணால் கட்டப்பட்ட தேவாலயத்தில் வைத்தார்கள். ஒல்லாந்தரின் வேதகலாபனைக் காலத்தில், காலத்துக்குக் காலம் இடம் மாற்றிக் கிணறுகளிலும், சந்து பொந்துகளிலும், மறைத்து வைத்து, தம் கண்ணிமை போல் காத்து வந்தனர். எம் மூதாதையர்களால் காப்பாற்றப்பட்டு வந்த, அதே கதிரை மாதாவின் சுரூபமே, இன்னும் சில்லாலைத் தேவாலயத்தில் அமைந்துள்ளது என்பது அற்புதமானது.


0 Comments:
Post a Comment
<< Home